மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் இரயில் நிலையப் பகுதியில், ஆறு மாதக் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது குழந்தை காணாமல் போய்விட்டதாக ஒரு பெண் காவல்துறைக்குத் தகவல் அளித்தார். குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட காவல் நிலையப் போலீசார் உடனடியாக விசாரணையில் களமிறங்கினர்.
போலீசார் கல்யாண் இரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை மிகத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் நடத்தை மற்றும் நடமாட்டங்கள் குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, அந்தக் குழந்தை கடத்தப்படவே இல்லை என்பதும், அந்தப் பெண் காவல்துறையிடம் முற்றிலும் பொய்யான புகாரை அளித்துள்ளார் என்பதும் தெரியவந்து போலீசாரையே அதிர வைத்தது. இறுதியில் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்தப் பெண் உண்மையை ஒப்புக்கொண்டார். அந்தப் பெண் தனது கணவரைப் பிரிந்து, தனது ஆண் நண்பரைச் சந்திப்பதற்காக கல்யாண் பகுதிக்கு வந்துள்ளார்.
இந்த உண்மை தனது குடும்பத்தினருக்குத் தெரியவந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தப்பித்துக் கொள்வதற்காகவும், தனது ஆறு மாதக் குழந்தை திருடப்பட்டுவிட்டதாக ஒரு நாடகமாடி போலீசில் பொய்ப் புகார் அளித்துள்ளார். இந்த சதித்திட்டத்தை மகாத்மா புலே சவுக் போலீசார் சில மணி நேரங்களிலேயே கண்டுபிடித்து வழக்கின் பின்னணியில் இருந்த மர்மத்தை உடைத்தனர்.
