இந்திய இரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் துண்டுகள் திருடப்படுவது தொடர்ந்து பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், எக்ஸ் (X) தளத்தில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வினோதமான வீடியோ இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் குர்தா அணிந்திருக்கிறார்.

அந்த குர்தா சாதாரண துணியால் தைக்கப்பட்டது அல்ல அதில் மேற்கு ரயில்வே என்ற முத்திரை அப்பட்டமாக அச்சிடப்பட்டுள்ளது. அதாவது, ரயில்வேயில் திருடப்பட்ட படுக்கை விரிப்புத் துணியைக் கொண்டு அந்த குர்தா தைக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் ரயில்வே சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அப்பட்டமாகக் காட்டுகிறது.

“>

இந்த வினோத வீடியோ ஒருபுறம் வேடிக்கையாகத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் இருக்கும் உண்மை மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி 2022 முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் மட்டும், ஏசி பெட்டிகளில் இருந்து முகத் துண்டுகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் உட்பட சுமார் 1.27 கோடி பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இதனால் மேற்கு ரயில்வேக்கு மட்டும் சுமார் 104.51 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்களில் பயணிகள் செய்யும் இந்த தொடர் திருட்டுச் சம்பவங்களால் இந்திய இரயில்வே நிர்வாகம் மட்டுமின்றி, காணாமல் போகும் பொருட்களுக்கான நிதிச் சுமையைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரயில்வே ஊழியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த ‘ரயில்வே குர்தா’ வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களையும், சில நகைச்சுவையான கருத்துகளையும் பகிர்ந்து வருகின்றனர். ரயில்வேக்குச் சொந்தமான படுக்கை விரிப்புகள் எவ்வாறு பொதுச் சந்தைக்கு வந்தன என்றும், இந்த விநியோகச் சங்கிலியில் ரயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்றும் பலர் கேள்வி எழுப்பி, இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணடிக்கப்படுவதாகச் சிலர் கொந்தளித்தாலும், மற்றொரு தரப்பினர் “ரயில் படுக்கையிலிருந்துன் நேராக அலமாரிக்கு வந்துவிட்டது” என கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோ குறித்து மேற்கு ரயில்வே தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும், இரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பது என்பது தொடர்ந்து ஒரு பெரிய சவாலாகவே நீடிக்கிறது என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது.