உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கமான மற்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அனைத்து விசாரணைகளிலும், வழக்கறிஞர்கள் தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் வாதாடும் வழக்கறிஞர்கள் தாங்கள் எவ்வளவு நேரம் வாதாடப் போகிறோம் என்ற கால அளவை, விசாரணை தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே ஆன்லைன் போர்டல் வாயிலாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவுபெற்ற வழக்கறிஞர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் ‘வருகை சீட்டு’ இணையதளம் மூலமாகவே இந்தத் தகவலைப் பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களின் முக்கிய அம்சங்களை ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான வாதங்களாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த ஆவணத்தை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு, வழக்கு விசாரணைத் தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து வழக்கறிஞர்களும் இந்த காலக்கெடுவை முறையாகப் பின்பற்றி, தாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.