பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான நடிகர் சரத்குமாரின் பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நேற்று ஜூலை 25-ஆம் தேதி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அரசியல் களத்தில் எதிர்எதிர் துருவங்களாகக் கருதப்படும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் ஒரே மேடையில் கலந்துகொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

விழாவில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அரசியல் வேறுபாடுகளைக் தாண்டி தாங்கள் அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “அண்ணன் சரத்குமார் ஒரு கட்சியைச் சார்ந்திருக்கலாம், என் மாமா  நயினார் நாகேந்திரன் ஒரு கட்சியின் தலைவராக இருக்கலாம், நாங்கள் தனி இயக்கத்தை நடத்தலாம்; எங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், நாங்கள் அனைவரும் தமிழ் தாயின் பிள்ளைகள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது” என்று அவர் ஆவேசமாகப் பேசினார். மேலும், தாங்கள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜர், வ.உ.சி., பூலித்தேவன் மற்றும் வீரன் அழகுமுத்துக்கோன் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருந்தலைவர்களின் வழிவந்த வாரிசுகள் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அரசியல் நகர்வுகள் குறித்தும், மாறுபட்ட கருத்துக்கள் குறித்தும் பேசிய சீமான், “இன்று அதிமுகவில் இருப்பவர் நாளை பாஜகவுக்கு வரலாம் அல்லது வேறு கட்சிகளில் இயங்கலாம். இன்று சரி என்று படுவது நாளை தவறாகத் தோன்றலாம், இதுதான் அறிவு மற்றும் பகுத்தறிவு. கற்றறிவை விட பட்டறிவுதான் மேலானது” என்று சுட்டிக்காட்டினார். வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே அரசியல் அல்ல, மாறாக வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதுதான் உண்மையான அரசியல் என்ற புரிதலோடு இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதே மேடையில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த அரசியல் சங்கமம் குறித்து நகைச்சுவையுடனும் ஆச்சரியத்துடனும் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். “இந்த மேடை எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா… மாப்பிள்ளை சீமான் உள்பட எல்லாரும் இங்க இருக்காங்க” என்று வர்ணித்த அவர், இந்த நாட்டிற்காகவும் தமிழுக்காகவும் சீமான் பேசிய வார்த்தைகளை தமிழர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைத்தார். சில பேர் எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சராகி விடுகிறார்கள், ஆனால் முதலமைச்சருடைய முழு தகுதியும் சரத்குமாருக்கு இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், “இறைவன் சில நேரத்தில் வைக்கக் கூடாத இடத்தில் சில பேரை வைத்துவிடுவான், இதற்கான காலகட்டம் இப்போது கலிகாலம்…” என்று கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.

மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியை தங்கள் கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே சீமான் எங்களுடன் சேர்ந்து இருந்தால் இன்று நிலைமையே மாறி இருக்கும் என நயினார் நாகேந்திரன் பேசியது கவனிக்கத்தக்க விஷயம் ஆக மாறி உள்ளது. இதன் காரணமாக வருகிற இடைத்தேர்தலில் பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்கலாம் அல்லது நாம் தமிழர் கட்சிக்கு பாஜக ஆதரவு கொடுக்கலாம் என்று செய்திகள் வெளிவந்துள்ளது