நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21 வயதாகக் குறைக்க வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் ஏ.ரேவந்த் ரெட்டி அதிரடிக் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விரைவில் மாநிலச் சட்டமன்றத்தின் சிறப்புச் கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசுக்கு முறையான பரிந்துரையை அனுப்ப உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாட்டின் அரசியலில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு (Gen Z) அதிக அளவில் வாய்ப்புகளும் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்பதை அவர் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.

வரும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் சட்டமன்ற மற்றும் மேலவையின் சிறப்பு அமவைக் கூட்டி, எம்.எல்.ஏ அல்லது எம்.பி தேர்தலில் போட்டியிடும் குறைந்தபட்ச வயதை 21-ஆகக் குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவுள்ளதாக முதல்வர் தெரிவித்தார். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 30 சதவீதமாக இருக்கும் இளைஞர்களுக்கு, நாடாளுமன்றத்தில் 1 சதவீதத்திற்கும் குறைவான பிரதிநிதித்துவமே இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இளம் வயதினரே நாட்டின் முக்கிய பொறுப்புகளுக்கு வரும்போது, இந்தியாவிலும் ஏன் அந்த மாற்றத்தைக் கொண்டுவரக் கூடாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்திப் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், இளைஞர்களின் தொடர் போராட்டமே மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை தனது பதவியை ராஜினாமா செய்ய வைத்தது என்று குறிப்பிட்டார். தங்களது கோரிக்கைகளையும் குரலையும் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக்கொண்டு செல்ல, இளைஞர்கள் வெறும் வீதிகளில் போராடுவதுடன் நின்றுவிடாமல் நாடாளுமன்றம் வரை தங்கள் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதே கூட்டத்தில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஒரு முக்கிய கோரிக்கையை வைக்கப் போவதாகத் தெரிவித்தார். எதிர்காலத்தில் ராகுல் காந்தி நாட்டின் பிரதமராகப் பதவியேற்கும் பட்சத்தில், இன்றைய இளம் தலைமுறை இளைஞர் ஒருவரை மத்தியக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தப் போவதாக அவர் கூறினார்.