உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் உள்ள குஜைனி பகுதியில், தேசிய நெடுஞ்சாலை அருகில் டிராபிக் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருபோலீஸ் அதிகாரியைப் பெண் ஒருவர் நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்கில் பெட்ரோல் பம்ப் எதிரே நடந்த இந்தச் சண்டையின் போது, அந்தப் பெண் சீருடையைப் பிடித்து இழுத்து சரமாரியாக கைகலப்பில் ஈடுபட்டார். இந்தத் திடீர்சண்டையால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், அங்கிருந்த பொதுமக்கள் இதைப் பார்த்தவாறே தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர்.
இந்த மோதலுக்கான காரணம் குறித்து இரண்டு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த போலீஸ் அதிகாரி தன்னைத் தவறான முறையில் தொட்டுத் தொந்தரவு செய்ய முயன்றதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ஆரம்பக்கட்ட விசாரணையின்படி, வாகனங்கள் ஓடும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு சிறிய மோதலே இந்த விவகாரத்திற்கு அடிப்படைக் காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மோதல் ஏற்பட்டவுடன் ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன் கட்டுப்பாட்டை இழந்து, பணியில் இருந்த போலீஸ் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.
View this post on Instagram
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த வைரல் வீடியோவில், அந்தப் பெண் தனது முகத்தைத் துணியால் மூடிக்கொண்டிருப்பதால் அவரை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள உதவிப் போலீஸ் ஆணையர் வைரல் வீடியோவை முக்கிய ஆதாரமாகக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
இதுவரை இரு தரப்பிலிருந்தும் காவல்துறையினருக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான எழுத்துப்பூர்வ புகாரும் வரவில்லை. புகாரைப் பெற்றவுடன், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்பூர்வமான அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
