டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே நடைபெற்ற ஒரு கோர விபத்தில் நர்சிங் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவில் மதுபோதையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, பைக் மீது பயங்கரமாக மோதியதுடன், பைக்கில் இருந்த இளைஞரை சுமார் 10 மீட்டர் தூரம் சாலைகளில் இழுத்துச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 24 வயது இளைஞரான ஆதித்யா குமார், கவுர் சிட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சிங் ஊழியராகப் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் தனது நைட் டியூட்டியை முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பிரித்லா மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலையிலிருந்து மெயின் ரோட்டிற்கு அவர் திரும்பியபோது, எதிரே வந்த அதிவேக ஸ்கோடா கார் அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் பைக் காரின் முன்பகுதியில் மாட்டிக்கொள்ள, கார் ஓட்டுநர் சுதாரிப்பிக்காமல் ஆதித்யாவை சுமார் 10 மீட்டர் தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்றார்.
இந்த விபியத்தைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாகக் காரைச் சுற்றிவளைத்து அதில் இருந்தவர்களைப் பிடித்தனர்; இருப்பினும் ஒருவர் தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த ஆதித்யாவை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார், கார் ஓட்டுநர் சிராக் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் ஆகியோரைக் கைது செய்தனர். உயிரிழந்த ஆதித்யாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெற்றோருக்கு ஒரே மகனாக இருந்த ஆதித்யாவிற்குத் திருமணம் செய்வதற்காக வீட்டில் தீவிரமாகப் பெண் பார்த்து வந்துள்ளனர்; விரைவில் திருமணம் நடக்கவிருந்த மகிழ்ச்சியான சூழல், இந்த விபத்தால் ஒரே நொடியில் சோகத்தில் மூழ்கியது. விபத்தில் சிக்கிய ஸ்கோடா கார் வெறும் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வாங்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து தொடர்பாகக் கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்பதை உறுதிப்படுத்தவும், தப்பியோடிய மூன்றாவது நபரைப் பிடிக்கவும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
