குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா, கடந்த 2024 ஆம் ஆண்டு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் திரும்பினார். அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், மும்பை அணியில் அவருக்கு சக வீரர்களிடமிருந்து தகுந்த மரியாதை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அணியின் ஒட்டுமொத்த செயல்பாடும் மோசமாக இருந்ததோடு, வீரர்கள் அறையிலும் அடிக்கடி சலசலப்புகளும் பிளவுகளும் ஏற்பட்டு வந்தன.

இதன் காரணமாக கடந்த 3 ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் ஏமாற்றங்களையே சந்தித்தது. குறிப்பாக 2024-ல் பத்தாவது இடத்தைப் பிடித்த அந்த அணி, 2025-ல் பிளேஆஃப் வரை சென்றாலும், நடப்பு 2026 சீசனில் மிக மோசமான நிலையை எட்டியது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஹர்திக் பாண்ட்யா மும்பை அணியில் இருந்து வெளியேற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதேவேளையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும் அவரை அணியிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யாவை டிரேட் முறையில் தங்கள் அணிக்குக் கொண்டுவர ஐபிஎல்-லின் பெரும்பாலான அணிகள் கடும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை வாங்குவதற்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தோராயமாக ரூ.20 கோடி மதிப்புடைய ஹர்திக் பாண்ட்யாவை விட்டுக்கொடுக்க, அதற்குப் பொருத்தமான மற்றும் மதிப்புமிக்க வீரர்களை மும்பை அணி எதிர்பார்க்கிறது.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில், தங்களது இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆயுஷ் மாத்ரேவை டிரேடில் தருமாறும், அதனுடன் கூடுதல் பணமும் தருமாறும் சிஎஸ்கே-விடம் கேட்கப்படுவதாகத் தெரிகிறது. 180-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள இளம் திறமையாளரான ஆயுஷ் மாத்ரேவை கைவிட சென்னை அணி விரும்பவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக ஸ்டார் வீரர் ஷிவம் துபே மற்றும் டெவால்டு பிரேவிஸ் ஆகியோரையும், கூடுதல் பணத்தையும் தருவதாக சிஎஸ்கே தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த வர்த்தகம் குறித்து இரு அணிகளும் இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதி எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.