இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி தொடக்க ஆட்டக்காரருமான ரோஹித் ஷர்மா, தனது அதிரடி ஆட்டத்தால் ‘ஹிட்மேன்’ என்று உலகளவில் அழைக்கப்படுகிறார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3 இரட்டைச் சதங்கள் விளாசிய ஒரே பேட்டர் என்ற உலக சாதனையை தன் வசம் வைத்துள்ள அவர், சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 34 ஒருநாள் சதங்களை பதிவு செய்துள்ளார். இருப்பினும், உலகின் ஐந்து மிகவும் புகழ்பெற்ற சர்வதேச மைதானங்களில், ஒருநாள் போட்டிகளில் சதமடித்த ஒரே இந்திய பேட்டர் என்ற அரிய சாதனையை ரோஹித் ஷர்மா மட்டுமே படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விராட் கோலி போன்ற கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாலும் கூட இந்த 5 மைதானங்களில் ஒருநாள் சதமடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் வேகத்திற்கும் பவுன்ஸிற்கும் பெயர்பெற்ற பெர்த் மைதானம் (வாக்கா) பேட்டர்களுக்கு எப்போதும் பெரும் சவாலாகவே இருந்துள்ளது. இந்திய அணி இந்த மைதானத்தில் இதுவரை 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அங்கு சதமடித்த ஒரே இந்திய வீரர் ரோஹித் ஷர்மா மட்டுமே. கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 163 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் குவித்து ரோஹித் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். அதேபோல், ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இங்கு 110 பந்துகளில் 138 ரன்கள் விளாசிய ரோஹித், லார்ட்ஸ் மைதானத்தில் ஒருநாள் சதமடித்த முதல் மற்றும் ஒரே இந்திய பேட்டர் என்ற பெருமையையும் பெற்றார்.

இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மற்றும் சவுத்தாம்ப்டனில் உள்ள தி ரோஸ் பவுல் ஆகிய மைதானங்களிலும் இந்த தனித்துவமான சாதனைத் தொடர்கிறது. ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இந்தியா விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில், 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ரோஹித் ஷர்மா அடித்த 137* ரன்களே ஒரே சதமாக உள்ளது. அதேபோல, தி ரோஸ் பவுல் மைதானத்தில் இந்தியா ஆடி உள்ள 5 ஒருநாள் போட்டிகளில், 2019 உலகக்கோப்பையின் போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோஹித் விளாசிய 122* ரன்கள் மட்டுமே இந்தியர் ஒருவரால் அடிக்கப்பட்ட ஒரே ஒருநாள் சதமாகும்.

அதேபோல், ஆசிய பேட்டர்களுக்கு எப்போதும் கடினமான ஆடுகளமாக கருதப்படும் தென்னாப்பிரிக்காவின் சென்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்திலும் ரோஹித் தனது முத்திரையைப் பதித்துள்ளார். இந்திய அணி இந்த மைதானத்தில் இதுவரை 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும், கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது ரோஹித் ஷர்மா அடித்த 115 ரன்களே இந்த மைதானத்தில் இந்திய வீரர் ஒருவரின் ஒரே ஒருநாள் சதமாக நிலவுகிறது. இந்த 5 மைதானங்களிலும் வேறு எந்த இந்திய வீரரும் ஒருநாள் சதமடிக்காத நிலையில், ரோஹித் ஷர்மாவின் இந்த சாதனை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய சாதனையாக மாறியுள்ளது.