நடந்துவரும் ‘தி ஹன்றெட் 2026’ கிரிக்கெட் தொடரில் கிரிக்கெட் உலகை அதிரவைக்கும் ஒரு புதிய சர்ச்சை எழுந்துள்ளது. டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் பிர்மிங்காம் ஃபீனிக்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் வீசிய பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர் டிம் டேவிட், பந்துவீச்சு சரியில்லை என்று குற்றம்சாட்டியது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உஸ்மான் தாரிக் வீசிய ஒரு பரந்த பந்தை (Wide ball) அடிக்க முயன்ற டிம் டேவிட், பேட்டில் பட்டு நேராக விக்கெட் கீப்பர் கைகளில் சிக்கி அவுட்டானார். நடுவரும் உடனடியாக அவுட் என்று தீர்ப்பு வழங்கினார்.
ஆனால், களத்தை விட்டு உடனே வெளியேற மறுத்த டிம் டேவிட், எதிரணி பந்துவீச்சாளரின் பந்துவீச்சு முறையில் தவறு இருப்பதாகக் கூறி நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்தப் பந்தை உடனடியாக ‘நோ-பால்’ என்று அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதுடன், உடனடியாக டி.ஆர்.எஸ் முறையீட்டிற்கும் சென்றார். இருப்பினும், கள நடுவர்கள் அந்தப் பந்துவீச்சில் எந்தத் தவறும் இருப்பதாக நினைக்கவில்லை; இதனால் டிம் டேவிட்டின் அவுட் தீர்ப்பு உறுதியானது. உஸ்மான் தாரிக்கின் இந்த பந்துவீச்சு முறை குறித்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கேள்விகள் எழுவது இது முதல் முறையல்ல.
Tim David becomes the latest player to question Usman Tariq’s bowling action. pic.twitter.com/v72MgIHrqN
— Sheri. (@CallMeSheri1_) July 25, 2026
கடந்த ஜனவரி 31, 2026 அன்று லாஹூர் கடாபி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் – இங்கிலாந்து போட்டியின் போதும் இதே போன்றதொரு சம்பவம் நடந்தது. அப்போது ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் கிரீன், உஸ்மான் தாரிக் பந்தில் அவுட்டாகி வெளியேறும் வழியில் அவரது பந்துவீச்சு முறையைக் கிண்டல் செய்யும் வகையில் சைகைக் காட்டினார். அந்த நிகழ்வு கேமராவில் சிக்கி கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
தனது பவுலிங் மீது தொடரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள உஸ்மான் தாரிக், தனது உடற்கூட்டு அமைப்பின் காரணமாகத்தான் கை இயற்கையாகவே அப்படி மடங்குகிறது என்றும், மருத்துவப் பரிசோதனைகள் மூலமாக தனக்கு எந்தத் தவறும் இல்லை என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் உறுதியாகக் கூறி வருகிறார். ஐ.சி.சி மற்றும் எம்.சி.சி விதிகளின்படி, பந்தை எரியாமல் விதிகளுக்கு உட்பட்டு கை சுழற்றப்படும் வரை பந்துவீச்சு சட்டப்பூர்வமானதாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
