நம்மில் பலருக்குக் கால்களில் திடீரென வீக்கம் ஏற்படுவதும், சில நாட்களில் அதுவே சரியாவதும் வழக்கமான ஒன்றாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது அல்லது நீண்ட தூரம் நடப்பது போன்ற காரணங்களால் ஏற்படும் சாதாரண வீக்கமாக இதை பலர் நினைத்துக் கடந்து விடுகிறார்கள். ஆனால், கால்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து வீக்கம் ஏற்படுவது உடலின் உட்பகுதியில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதைக் காட்டும் ஒரு முக்கிய எச்சரிக்கை சிக்னலாகும்.

கால்களில் ஏற்படும் இந்த தொடர் வீக்கத்திற்குப் பின்னால் பல தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் ஒளிந்திருக்கக்கூடும். குறிப்பாக, இதய நோய், சிறுநீரகப் கோளாறுகள் அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருக்கும்போது உடலில் நீர் தேங்கி, கால்களில் வீக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது தவிர, ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் கால் வீக்கத்திற்கு முக்கியக் காரணமாக அமைகின்றன.

மேலும், ரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலை அல்லது தைராய்டு கோளாறுகள் இருந்தாலும் கூட பாதங்கள் மற்றும் கால்களில் வீக்கம் வெளிப்படலாம். எனவே, காரணமே இல்லாமல் கால்களில் தொடர்ந்து வீக்கம் ஏற்படுவது, தொடும்போது வலிப்பது அல்லது வீக்கம் குறையாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

எனவே, கால்களில் ஏற்படும் வீக்கத்தை அலட்சியப்படுத்தாமல், சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். ஆரம்பத்திலேயே இதற்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெறுவது, பின்னாளில் வரக்கூடிய பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.