தினமும் மதிய உணவு சாப்பிட்டு முடித்தவுடன் பலருக்கும் லேசான தூக்கம், சோம்பல் மற்றும் உடல் சோர்வு ஏற்படுவது மிகச் சாதாரணமான ஒன்றுதான். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருப்பவர்கள் வரை பெரும்பாலானோர் இந்த ‘மதிய நேர மந்தநிலையை’ அனுபவிக்கிறார்கள்.
ஆனால், நாம் சாப்பிடும் உணவில் சில சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆற்றலுடனும் இயங்க முடியும். மதிய உணவிற்குப் பிறகு ஏற்படும் இந்த சோர்வுக்கு நாம் உண்ணும் உணவே முக்கியக் காரணமாக அமைகிறது. அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது, அதைச் செரிமானம் செய்ய உடல் அதிக ஆற்றலைச் செலவிடுவதால் இயல்பாகவே தூக்கமும் அசதியும் மேலிடுகிறது.
இதனைத் தவிர்க்க, மதிய உணவில் புரதச்சத்து , நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக்கொள்வது அவசியம். காய்கறிகள், கீரைகள், தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள புரத உணவுகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராகப் பராமரித்து, உடலுக்குத் தேவையான சீரான எனர்ஜியைத் தொடர்ந்து வழங்குகின்றன.
எனவே, மதிய வேளையில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, சத்தான உணவுகளைச் சரியான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. இது மதிய நேரச் சோம்பலை முற்றிலும் போக்கி, மாலை வரை உங்களைச் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க பெரிதும் உதவும்.
