போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 4-வது நீதிபதி ஜி.பி. சிங் நினைவுச் சொற்பொழிவில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் புயான் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தனிநபர் சுதந்திரம், பிணை வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் கருத்துரிமைக்கு சுருங்கி வரும் இடங்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். குறிப்பாக, வாரணாசியில் கங்கா நதியில் படகில் இப்தார் விருந்து நடத்தியதற்காக 14 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை அவர் கடுமையாகக் கேள்விக்குள்ளாக்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி உஜ்ஜால் புயான், கங்கா நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவது எந்த வகையிலும் சட்டப்படி குற்றமல்ல என்று சுட்டிக்காட்டினார். “கங்கை நதிக்கு மேல் சிக்கன் சாப்பிடுவதைத் தடை செய்யும் சட்டம் எதுவும் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். இதுபோன்ற ஒரு செயலுக்காக இளைஞர்களைக் கைது செய்து, மூன்று மாதங்கள் வரை பிணை மறுத்துச் சிறையில் அடைக்கலாமா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். கைது நடவடிக்கைகள் ஒருபோதும் தண்டனை வழங்கும் வடிவமாக மாறிவிடக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

கடந்த மார்ச் 2026-ல் வாரணாசியில் கங்கை நதியில் படகு ஒன்றில் 14 இளம் முஸ்லிம் ஆண்கள் இப்தார் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மத உண புண்படுத்துதல், வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் நதியை மாசுபடுத்தியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், படகைக் பலவந்தமாகப் பிடித்ததாகக் கூறி சில கடுமையான குற்றச்சாட்டுகளும் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாகச் சிறைவாசம் அனுபவித்த பின்னரே அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் பிணை பெற்று விடுவிக்கப்பட்டனர். நதியை மாசுபடுத்தியது அல்லது மத உணர்வுகளைப் புண்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றாலும், படகில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒரே காரணத்துக்காக இவ்வளவு நீண்ட சிறைவாசம் அவசியமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், சற்றே ஒத்த மற்றொரு சம்பவத்தில் இந்து இளைஞர்கள் நதிக்கரையில் மது அருந்திவிட்டுச் சமைத்தபோது அவர்களுக்கு உடனடியாகப் பிணை வழங்கப்பட்டதையும் ஒப்பிட்டு, குற்றவியல் நீதித்துறையில் சமமான நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.