உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரே இளைஞரை மூன்று இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுவென்சர் சகோதரிகள் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவிய இந்தத் திருமணத்தில், இளைய சகோதரி சிறுமி (மைனர்) என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அம்ரோஹா மாவட்டத்தின் குழந்தைகள் நலக்குழு தாமாக முன்வந்து இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்குக் குழந்தைகள் நலக்குழு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹசன்பூர் பகுதியில் உள்ள தோரியா கிராமத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகளில் இளையவரான சவி சந்தோஷ் என்பவர் இன்னும் வயதுக்கு வரவில்லை (மைனர்) என்ற தகவல் குழந்தைகள் நலக்குழுவிற்குத் கிடைத்தது. இந்தத் தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் அடிப்படையிலேயே காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில், தங்களது இந்த முடிவை அந்தச் சகோதரிகளும் அவர்களது கணவரான விகாஸும் மிகத் தீவிரமாக நியாயப்படுத்தியுள்ளனர். தங்களது தந்தை வேறு ஒரு நல்ல வரனைத் தேடியிருந்தாலும், தாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பிரியாமல் இருக்க விரும்பியதாக மூத்த சகோதரி அல்கா விளக்கமளித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களுக்குத் திருமணம் செய்துகொள்ள முயற்சித்தும் அது பலனளிக்காததால், இறுதியாகத் தங்களது கேமராமேன் விகாஸைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகக் கூறினர். மேலும், சமூக வலைதளங்களில் ‘ராஜ்புத் கேர்ள்’ என்ற பக்கத்தின் மூலம் ஏற்கனவே தங்களுக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருப்பதால், ‘வியூஸ்’ சேர்ப்பதற்காக இந்தத் திருமணத்தை நாடகமாக நடத்தவில்லை என்றும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இளைய சகோதரி சந்தோஷ் மீதான வயது குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அல்கா, கடந்த ஆண்டே தனது சகோதரிக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டதாகத் தெரிவித்தார். குறைந்த உயரம் அல்லது குழந்தைத்தனமான தோற்றத்தை வைத்து மட்டும் ஒருவர் மைனர் என்று முடிவு செய்ய முடியாது என்றும், அரசு தரப்பு விரும்பினால் முறையான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் சவால் விடுத்துள்ளனர். இதற்கிடையே, மூவரையும் பிரிக்காமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காகவே தான் இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகக் கணவர் விகாஸ் கூறியுள்ளார். ஹசன்பூர் போலீசாரின் இறுதி விசாரணை அறிக்கையும், இளைய பெண்ணின் வயது குறித்த உண்மையும் வெளிவந்த பின்னரே இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகள் உறுதியாகும்.
