பெங்களூரு மாநகரில் நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் வீடுகளின் வாடகைக் கட்டணம், தற்போது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த வீடியோ ஒன்றில், மாதத்திற்கு 60,000 ரூபாய் வாடகை வசூலிக்கப்படும் அபார்ட்மெண்ட் வீடு ஒன்றின் அமைப்பு அனைவரையும் வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
வீட்டின் உட்புற அமைப்பும், அங்கிருந்து வெளியே தெரியும் திறந்தவெளிப் பார்வையும் பிரம்மாண்டமாக இருந்தாலும், ஒரு தனிநபரின் குடியிருப்புக்கு இவ்வளவு அதிகத் தொகையைக் கட்டணமாக வசூலிப்பது நியாயம்தானா என்ற கேள்வி சோசியல் மீடியாவில் சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் இருவேறு கருத்துகளை முன்வைத்து மோதி வருகின்றனர். ஒரு தரப்பினர், பெங்களூருவின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் நவீன வசதிகள், அமைதியான சூழல் மற்றும் கண்களுக்கு விருந்தளிக்கும் வெளிப்பார்வைக்கு இந்த 60,000 ரூபாய் வாடகை முற்றிலும் தகுதியானதுதான் என்றும், அமைதியான வாழ்க்கையை விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வு என்றும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
ஆனால், மறுபுறமோ பெரும் தரப்பினர், வெறும் வெளிப்பார்வைக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் இவ்வளவு பெரிய தொகையை வாடகையாகக் கொட்டுவது அநியாயமான பண விரயம் என்றும், சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு பெங்களூருவின் வாடகை சந்தை சீரழிந்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தொழில்நுட்ப நகரமாக வேகமாக வளர்ந்து வரும் பெங்களூருவில், ஐடி ஊழியர்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்களின் வருகையால் வாடகை வீடுகளுக்கான தேவை உச்சத்தை தொட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக்கொண்டு வீட்டு உரிமையாளர்கள் அதிக அளவிலான வாடகையைக் கோருவது தொடர்கதையாகி வருகிறது.
60,000 ரூபாய் வாடகை என்பது உண்மையில் பெறுமானமான ஒன்றா அல்லது வெறும் விளம்பர மோகத்தால் ஏற்படுத்தப்பட்ட வாடகை உயா்வா என்ற இந்த விவாதம், நாட்டின் பெருநகரங்களில் அதிகரித்து வரும் குடியிருப்புச் செலவுகள் குறித்த முக்கிய உரையாடலைத் தொடக்கி வைத்துள்ளது.
See this Instagram video by @totoeyess https://t.co/MtfvPlOG4g
“>
