அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ‘சினேபோலிஸ் லக்ஸரி’ திரையரங்கிற்குத் தனது நண்பர்களுடன் திரைப்படம் பார்க்கச் சென்ற 24 வயது இளம்பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியைக் கண்டு அந்தப் பெண்ணும் அவரது நண்பர்களும் உரக்கச் சிரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர், அவர்களிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் அந்தப் பெண்களின் உணவைக் கீழே தட்டி விடுவதாக மிரட்டியுள்ளார். “முடிந்தால் தட்டி விடுங்கள்” என்று அந்தப் பெண் தைரியமாகக் கூறியதும், ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த நபர், உணவை தூக்கி தட்டியதோடு மட்டுமல்லாமல், கையில் இருந்த பீஸா தட்டை எடுத்து அந்தப் பெண்ணின் முகத்திலேயே ஓங்கி அடித்துள்ளார். இதில் அந்தப் பெண்ணிற்கு விரலில் முறிவு ஏற்பட்டதோடு, முகத்தில் காயமும், கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிட்டது.
View this post on Instagram
தாக்குதல் நடத்திய பின், எதுவுமே நடக்காதது போல அந்த நபர் மீண்டும் தனது சீட்டுக்கே சென்று அமர்ந்து, “சியர்ஸ்” என்று கூறியதாகப் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். உடனே அந்தப் பெண்கள் திரையரங்கப் பாதுகாப்பு ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இருப்பினும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் முழுவதையும் அந்தப் பெண்ணின் தோழி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், தப்பியோடிய நபரை மியாமி நகரக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திரைப்படத்தின் போது நடந்த இந்த வன்முறைச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
