கேரள மாநிலத்தின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான சாபு எம். ஜேக்கப் தலைமையிலான ‘டுவென்டி 20’ (Twenty20) கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கேரளா மற்றும் தமிழகத் தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று தொடங்கிய நிலையில், இந்தக் கூட்டணிப் பிணைப்பு இறுதி செய்யப்பட்டது.
கிடெக்ஸ் கார்மெண்ட்ஸ் தலைவரும், டுவென்டி 20 கட்சியின் நிர்வாக இயக்குநருமான சாபு எம். ஜேக்கப், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருடன் இன்று முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில், இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்து இந்தக் கூட்டணி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த கூட்டணி குறித்து சாபு ஜேக்கப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கேரளாவில் தற்போது நிலவி வரும் தவறான நிர்வாகம் மற்றும் ஊழலுக்கு ஒரு வலுவான மாற்றாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கும். பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்களுடன் இணைந்து ‘வளர்ந்த கேரளா’ என்ற இலக்கை அடைவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளோம்.”
கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கி வந்த டுவென்டி 20 கட்சி, முதன்முறையாக ஒரு முன்னணியுடன் கரம் கோர்த்துள்ளது. இக்கட்சிக்கு எர்ணாகுளம் மற்றும் மத்திய கேரள மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்தப் பகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவும் என்றும், தேர்தல் களம் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
டுவென்டி 20 கட்சியுடன் சேர்த்து, முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.வி. தாமரக்ஷன் தலைமையிலான ஜனதிபத்ய சம்ரக்ஷண சமிதி (JSS) பிரிவும் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கேரளாவில் பாஜக தலைமையிலான கூட்டணியைப் பலப்படுத்தியுள்ளது.
