இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ.) நிர்வகிக்கப்படும் கிரிக்கெட் அணியை ‘டீம் இந்தியா’ அல்லது ‘இந்திய தேசிய கிரிக்கெட் அணி’ என்று அழைக்கத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், இத்தகைய தேவையற்ற வழக்குகளைத் தொடருவதற்காக மனுதாரருக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது.
வழக்கறிஞர் ரீபக் கன்சல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “பி.சி.சி.ஐ. என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் அமைப்பு மட்டுமே. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் ‘பொது அதிகார அமைப்பு’ அல்ல. அவ்வாறிருக்கையில், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் இந்த அணியை ‘டீம் இந்தியா’ என்று அழைப்பது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் செயலாகும். இது 1950-ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் தடுப்புச் சட்டத்திற்கு எதிரானது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
“இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை. இது நீதிமன்றத்தின் நேரத்தை அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். உலகெங்கும் சென்று விளையாடும் இந்த அணி, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? தூர்தர்ஷனோ அல்லது பிற அமைப்புகளோ ‘டீம் இந்தியா’ என்று குறிப்பிட்டால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?
இத்தகைய தேவையற்ற மனுக்களைத் தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றமே முன்மாதிரியான அபராதம் விதித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க முற்பட்டனர். எனினும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞரின் தொடர் கோரிக்கையை ஏற்று, அபராதத்தை மட்டும் தள்ளுபடி செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா தலைமையிலான அமர்வும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது. “ஒலிம்பிக் அல்லது காமன்வெல்த் போட்டிகளுக்குச் செல்லும் வீரர்கள் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? ஹாக்கி, கால்பந்து அல்லது டென்னிஸ் என எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, அவர்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையா?” என்று கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீர்ப்பின் மூலம், பி.சி.சி.ஐ. அணியை ‘டீம் இந்தியா’ என்று அழைப்பதில் நிலவி வந்த சட்டச் சிக்கல்கள் முடிவுக்குவந்துள்ளன.
