உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே, மதம் கடந்து காதலித்ததற்காக இளம் பெண்ணையும் அவரது காதலனையும், பெண்ணின் சகோதரர்களே கைகால்களைக் கட்டி வைத்து கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்மான் (27). இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றிவிட்டு, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த காஜல் (22) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், காஜலின் குடும்பத்தினர் இக்காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, காஜலின் மூன்று சகோதரர்கள் அர்மானை எச்சரித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அர்மான் மற்றும் காஜல் ஆகிய இருவரையும் காணவில்லை எனத் தெரிகிறது. இது குறித்து அர்மானின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் காஜலின் சகோதரர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தங்கள் தங்கை காஜலையும், அவரது காதலன் அர்மானையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: “தங்கையின் காதல் விவகாரம் கௌரவக் குறைவாகக் கருதப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நாங்கள், இருவரையும் பிடித்து கைகால்களைக் கட்டி வைத்து வெட்டிக்கொலை செய்தோம். பின்னர், யாருக்கும் தெரியாமல் உடல்களை நதிக்கரையில் குழிதோண்டிப் புதைத்துவிட்டோம்,” எனத் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் அடையாளம் காட்டிய நதிக்கரை பகுதிக்குச் சென்ற போலீசார், புதன்கிழமை மாலை இருவரின் உடல்களையும் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக காஜலின் சகோதரர்கள் மூன்று பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதால், அப்பகுதியில் மத ரீதியான பதற்றம் ஏற்படாமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.