கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் சேரூர் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (55). நடன ஆசிரியையான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையில், விக்னேஷ் என்கிற விக்கீஷ் (39) என்பவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறி, இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 4-ந்தேதி தான் ஒரு நடன நிகழ்ச்சிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற தனலட்சுமி, கள்ளக்காதலன் விக்னேசுடன் திருச்சூருக்கு வந்துள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அதிக மதுபோதையில் இருந்த விக்னேசுடன், தனலட்சுமி உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தன்னை உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுமாறு தனலட்சுமி விக்னேஷிடம் கடுமையான வற்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதற்கு விக்னேஷ் “சில மாதங்களுக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று சமாளித்துள்ளார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தனலட்சுமி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற விக்னேஷ், மறைந்திருந்த ஆத்திரத்தில் தனலட்சுமியின் கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
கொலையைச் செய்துவிட்டுப் பயந்துபோன விக்னேஷ், விடுதி அறையின் கதவை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி தனது சொந்த ஊரான மலப்புரத்திற்குச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் பயத்தால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்த அவர், விடுதியில் நடந்த கொடூரச் சம்பவத்தை தனது சகோதரியிடம் ஒப்புக்கொண்டுள்ளார். சகோதரியின் அறிவுரையின் பேரில், உடனடியாக தேஞ்சிப்பலம் காவல் நிலையத்திற்குச் சென்று விக்னேஷ் சரணடைந்தார். அங்கு போலீசாரிடம் தான் செய்த கொலையை அவர் விரிவாக ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தகவலறிந்த போலீசார், உடனடியாக அந்தத் தனியார் விடுதிக்கு விரைந்து சென்று, பூட்டப்பட்டிருந்த அறைக்கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். அங்கு தனலட்சுமியின் சடலம் கிடப்பதைக் கண்டு மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காகத் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடி சரணடைந்த விக்னேஷைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
