தமிழ்நாடு சட்டப்பேரவையின் 110 விதியின் கீழ், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நெல் மற்றும் கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 289 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சேர்த்து மொத்தம் ரூ. 2,750-ஆக வழங்கப்படுகிறது.
பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 159 உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகளில் கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு தரப்பில் டன்னுக்கு ரூ. 3,290.50 வழங்கப்படுகிறது. தமிழக அரசு சார்பில் கரும்புக்கான ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ. 709.50 கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 முழு விலையாகக் கிடைக்கும்.
சட்டப்பேரவையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய முதலமைச்சர் விஜய், “நெல்லுக்கான ஊக்கத்தொகையை ஓராண்டில் இவ்வளவு பெரிய அளவில் உயர்த்துவதும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு இந்த அளவுக்கு விலை வழங்குவதும் நமது வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். தற்போதைய நிதிநிலை சவாலாக இருந்தாலும், விவசாயிகள் எங்களை நம்பி பயிரிடும்போது, அரசு அவர்களுக்கு எப்போதும் தோளோடு தோல் நின்று உறுதுணையாக இருக்கும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
