மேற்கு வங்காள மாநிலம் வடக்கு  பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ஷபிகுல் மொல்லா (20) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த வாலிபர் சிறுமியிடம் காதல் வார்த்தைகளைக் கூறி நாடகமாடி உள்ளார். அவரின் பேச்சை முழுமையாக நம்பிய சிறுமி, சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனுடன் சென்றுள்ளார்.

ஆனால், காதலித்து கரம் பிடிப்பார் என்று நம்பிய அந்த சிறுமிக்கு காதலனே பேரிடியாக மாறியுள்ளான். கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதிகள் பெருமளவில் நிறைந்த பகுதியான சோனாகச்சிக்கு அந்த சிறுமியை ஷபிகுல் மொல்லா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சஹருல் லஸ்கர் (39) என்பவரிடம் பணம் பெற்றுக் கொண்டு, அந்த இளம் சிறுமியை விபசார விடுதியில் விற்றுவிட்டுத் தப்பியுள்ளார்.

தன் காதலனால் வஞ்சிக்கப்பட்டு, நரகத்தில் மாட்டியதை உணர்ந்த சிறுமி மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். இந்தச் சூழலில், எப்படியோ ஒரு வழியில் தனது செல்போனைப் பயன்படுத்திய சிறுமி, நேற்ற முன்தினம் அவசரமாக போலீஸ் உதவி எண்ணுக்கும் மற்றும் குழந்தைகள் உதவி எண்ணுக்கும் போன் செய்துள்ளார். தன்னை எப்படியாவது இந்த நரகத்திலிருந்து காப்பாற்றுமாறு கதறி அழுதபடி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறுமி பேசியதை கேட்டு அதிர்ந்துபோன காவல்துறையினர், அவர் குறிப்பிட்ட அந்த இடத்திற்குத் துரிதமாக விரைந்து சென்றனர். அங்கு முடங்கிக் கிடந்த சிறுமியைப் பாதுகாப்பாக மீட்டு மீட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று விற்ற காதலன் ஷபிகுல் மொல்லா மற்றும் விபசார விடுதி தரகரான சஹருல் லஸ்கர் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் கைதான இருவரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலின் பெயரால் 16 வயது சிறுமி விபசார விடுதியில் விற்கப்பட்ட இந்தச் சம்பவம் கொல்கத்தா முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.