கர்நாடகாவில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனித நேயத்தை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. சொந்த மனைவியைக் கொன்றுவிட்டு, ஊர் உலகை ஏமாற்ற நினைத்த கணவனின் சதி, ஒரு சிறிய காயத்தால் அம்பலமாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் நேகிஹால் கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கீரப்பா. இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்தத் தம்பதிக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை எனத் தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த பக்கீரப்பா, ஆத்திரத்தில் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, தனது மனைவி திடீர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறி அழுது நாடகமாடியுள்ளார்.
இறப்பு இயற்கையானது என்று நம்பி உறவினர்கள் இறுதிச்சடங்கிற்குத் தயாராகினர். ஆனால், ராஜேஸ்வரியின் பெற்றோர் வந்து பார்த்தபோது, மகளின் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகத் தகனம் செய்வதைத் தடுத்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். பிரேதப் பரிசோதனையில் ராஜேஸ்வரி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டது உறுதியானது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், குழந்தை இல்லாத விரக்தியில் மனைவியைக் கொன்றதை பக்கீரப்பா ஒப்புக்கொண்டார்.
