ஆன்லைன் மூலம் சேவைகளைப் பெறும்போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

மும்பை வடாலா கிழக்கு பகுதியைச் சேர்ந்த ஷாநாஸ் வஹீத் சையத் (46) என்ற பெண், தோள்பட்டை வலி காரணமாக ‘அர்பன் கம்பெனி’ மூலம் மசாஜ் செய்ய முன்பதிவு செய்திருந்தார்.

புதன்கிழமை மாலை அவரது வீட்டிற்கு அஸ்வினி என்ற ஊழியர் மசாஜ் செய்ய வந்துள்ளார். ஆனால், அவர் கொண்டு வந்த மசாஜ் படுக்கை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், அதிருப்தி அடைந்த ஷாநாஸ் அந்தச் சேவையை ரத்து (Cancel) செய்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த அஸ்வினி, அந்தப் பெண்ணுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அஸ்வினி அந்தப் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் நகத்தால் கீறி கீழே தள்ளித் தாக்கியுள்ளார்.

இதைப் பார்த்த ஷாநாஸின் மகன் தனது செல்போனில் வீடியோ எடுத்து அலறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஊழியரை அர்பன் கம்பெனி தனது தளத்திலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.