திருவனந்தபுரம் பூந்துறை பகுதியைச் சேர்ந்த சஜிதா (54) மற்றும் அவரது மகள் கிரேஷ்மா (30) ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேஷ்மாவுக்கும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 29 நாட்களிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதற்கிடையில் கிரேஷ்மாவின் தந்தை ராஜீவ் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், தாய் மற்றும் மகள் இருவரும் தனியாக வசித்து வந்தனர். சமீபத்தில் உன்னிகிருஷ்ணனின் உறவினர் ஒருவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றபோது, அங்கு வந்த உன்னிகிருஷ்ணன் கிரேஷ்மாவையும் அவரது தாயையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சஜிதா அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். வீடு திரும்பிய பின்னரும் இந்த அவமானத்தால் மிகுந்த மனவேதனையில் இருந்த இருவரும், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

தங்கள் மரணத்திற்கு உன்னிகிருஷ்ணனே காரணம் என குடும்ப வாட்ஸ்-அப் குழுவில் தகவல் தெரிவித்துவிட்டு, இருவரும் சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்பப் பிரச்சனை காரணமாக தாய்-மகள் உயிரிழந்த இந்த விவகாரத்தில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.