கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பெட்டமுகிளாலம் கிராமத்தில் உள்ள கடமகுட்டை மலைக்கிராமத்தில் வசிக்கும் மல்லி (வயது 41) என்ற பெண், 10-வது முறையாக கர்ப்பம் ஏற்கப்பட்டது குறித்து, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த மருத்துவ முகாமில் தகவல் கிடைத்தது.
தொடர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு ரத்தசத்துக்குறைவுடன் (அனீமியா), உயர் இரத்த அழுத்தம் இருப்பதும் கண்டறிந்தனர். மேலும், மல்லிக்கு ஏற்கெனவே 7 குழந்தைகள் இருப்பதுடன், 2 முறை கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று கூறிய மருத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கும், மல்லி தயங்கினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 2 மணி நேரத்துக்கும் மேல் முயற்சி செய்தும், அவர் வரமறுத்ததால், இது குறித்து மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதையடுத்து, கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர், செவிலியர்களுடன் சேர்ந்து மல்லிக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தற்போது அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவ குழுவினரின் நேர்மையான செயல்பாடு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உடனடி தலையீடு, இந்த உயர்ஆபத்து கர்ப்பிணி உயிரிழப்பைத் தடுக்கும் ஒரு சிறந்த முன்னெடுப்பாக இருக்கிறது. இந்தச் சம்பவம், மலைப்பகுதிகளில் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு மற்றும் அணுகுமுறை இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.
