விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சத்தியவாணி முத்துநகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 24), பெயிண்டிங் வேலை செய்து வந்தவர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் , நண்பர்களுடன் சேர்ந்து மதுபான பார் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சில இளைஞர்கள் அவருடன் வசதியாகப் பழகுவதை போல நடித்து, தாங்கள் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தினேஷை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினர்.
தொடர்ந்து, பலத்த காயங்களால் தினேஷ் ரத்த வெள்ளத்தில் துடித்து உயிரிழந்தார். தகவல் கிடைத்ததையடுத்து அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தினேஷை கொலை செய்தவர்கள் யார்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பதை உறுதி செய்யும் வகையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டப்பகலில் இளைஞர் ஒருவரை நேரில் கத்தியால் தாக்கி கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை விரைவில் கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
