சென்னை கார்பேட்டையில் செயல்படும் செல்போன் கடை ஒன்றில் நடந்த ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான கொள்ளை சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமி பிள்ளை தெருவைச் சேர்ந்த அங்கேத்குமார் நடத்தும் செல்போன் கடையில் கடந்த 15ம் தேதி காலை ஷட்டர் பூட்டாமல் மூடிய நிலையில் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனே ஷட்டரை திறந்தபோது, கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ₹29.50 லட்சம் பணமும், 25 உயர் தர செல்போன்களும் திருட்டுப்போனதை கண்டு போலீசில் புகார் அளித்தார். யானைகவுணி காவல் நிலைய போலீசார் இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை செய்தபோது, அதே கடையில் கடந்த 6 மாதங்களாக வேலை பார்த்த வந்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் மீது சந்தேகம் வந்தது.
முகேஷ், கடந்த வாரம் வேலைவிட்டு விட்டுச் சென்றிருந்தார். விசாரணையில், அவர் முதலாளிக்கு தெரியாமல் ஷட்டர் சாவியை எடுத்து வைத்து, கள்ளச்சாவி தயாரித்து திட்டமிட்ட வகையில் கொள்ளையை நடத்தியது தெரியவந்தது.
அதுமட்டுமல்லாமல், முகேஷ் தனது காதலியை திருமணம் செய்து கொண்டு தெலுங்கானாவில் வாழ்ந்து விடவேண்டும் என்ற ஆசையுடன் இந்த திருட்டை திட்டமிட்டதாக தெரியவந்தது. விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் கடந்த வாரம் தனது காதலிக்கு ₹200 ஜிபே மூலமாக அனுப்பிய தகவலை கண்டுபிடித்தனர்.
இந்த விவரத்தை டிரேஸ் செய்த போலீசார், முகேஷ் மத்திய பிரதேசத்தில் பதுங்கியிருப்பதை கண்டறிந்து, சிறப்பு அணி மூலம் அவர் கைது செய்யப்பட்டார். மேலும், திருடப்பட்ட பணம் மற்றும் செல்போன்கள் முழுமையாக மீட்கப்பட்டன.
முகேஷிடம் மேற்கொண்ட விசாரணையில், “முதலாளியின் பணப்புழக்கம் அதிகமாக இருப்பதை பார்த்தவுடன் இந்த குற்றத் திட்டத்தை வகுத்தேன். காதலியுடன் செட்டில் ஆகவேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்தேன்” என தெரிவித்துள்ளார். தற்போது முகேஷை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
காதலிக்காக 30 லட்சம் திருடிய முகேஷ், 200 ரூபாய் அனுப்பிய ஒரு ஜிபே ட்ரான்சாக்ஷனாலேயே சிக்கிக்கொண்டது மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், சமூக வலைதளங்களிலும் பரவலாக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
