ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு, அக்ஷய திருதியை அன்று குழந்தை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை அறிந்த அச்சிறுமியின் 8 வயது நண்பன், உடனடியாக குழந்தைகள் உதவி மையமான 1098-க்கு அழைத்துத் தகவல் கொடுத்துள்ளான்.
“அவள் என்னுடன் விளையாடுபவள், பள்ளிக்குச் செல்பவள்; அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டாம், படிக்க வையுங்கள்” என்று அந்தச் சிறுவன் உருக்கமாகக் கேட்டுக்கொண்டான். இந்தச் சிறுவனின் துணிச்சலான செயலால் அதிகாரிகள் விரைந்து சென்று அந்தத் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.
அதிகாரிகள் நடத்திய சோதனையில், அதே இடத்தில் மற்றொரு 16 வயது சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் குழந்தைகள் நலக் குழுவின் முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானின் கிராமப்புறங்களில் அக்ஷய திருதியை அன்று இது போன்ற குழந்தை திருமணங்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுவது தொடர்கிறது. இருப்பினும், ஒரு சிறுவன் தனது தோழியின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துத் திருமணத்தைத் தடுத்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
