டெல்லியின் லோதி காலனியில் உள்ள பாலிகா குஞ்ச் பகுதியில், 28 வயதான ஆக்ரிதி என்ற புதுமணப் பெண், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதிதான் இவருக்கும் 30 வயதான ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு அதிகாரிக்கும் காதலித்து திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் சென்று வந்த ஆக்ரிதி, கடந்த சனிக்கிழமை அன்று தனது அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் திருமணக் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கணவருடன் வீடு திரும்பிய சில மணி நேரங்களில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது காவல்துறையினர் இந்த வழக்கை வரதட்சணை மரணமாகப் பதிவு செய்து அவரது கணவரைக் கைது செய்துள்ளனர். இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை என்று பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். காதல் திருமணமாக இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு ₹10 லட்சம் ரொக்கம் மற்றும் கார் கேட்டு அவரது கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் ஆக்ரிதியைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்ததில் இருந்து தனது குடும்பத்தைக் கவனித்து வந்த ஆக்ரிதி, தனது சம்பளத்தில் இருந்து ஒரு தொகையைத் தாய்க்கு அனுப்பியுள்ளார். ஆனால் வேலை இல்லாத அவரது கணவர், ஆக்ரிதியின் மொத்த சம்பளத்தையும் தனக்கே தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி சண்டை போட்டுள்ளார். பெண்ணின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.