ஐஐடி பாம்பேயில் தங்கப் பதக்கம் வென்ற விவேக் சர்மா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் இருந்து ஆண்டுக்கு 2.40 லட்சம் டாலர் சுமார் 2.9 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கான வாய்ப்பைப் பெற்றார்.
இதுகுறித்து விசா ஸ்பான்சர்ஷிப் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் போன்ற பல நன்மைகள் இதில் இருந்தபோதிலும், அவர் அமெரிக்கா செல்வதைத் தவிர்த்தார். கான்பூரைச் சேர்ந்த ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த விவேக்கின் கல்விக்காக அவருடைய தந்தை மற்றும் தாய் ஆகியோர் தங்களின் சேமிப்புகள் மற்றும் நகைகளை விற்று பெரும் தியாகங்களைச் செய்திருந்தனர்.
ஆனால், விவேக் தனது புதிய பணியைத் தொடங்குவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அவருடைய தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதோடு, தாயும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனால், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 2.9 கோடி ரூபாய் வேலை வாய்ப்பையும், விசா நேர்காணலையும் ரத்து செய்துவிட்டு பெற்றோருடன் இந்தியாவிலேயே தங்குவதற்கு அவர் முடிவெடுத்தார்.
இதனால் அமெரிக்கக் கனவைத் துறந்த விவேக் சர்மா, தற்போது தனது வீட்டின் கீழேயே ஒரு சிறிய மளிகைக் கடையை நடத்தி வருகிறார். அதே நேரத்தில், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாகக் கணினி குறியீட்டு முறையைக் கற்றுக்கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் குடும்பப் பொறுப்பு, கடினமான சூழ்நிலையில் எடுக்க வேண்டிய முடிவுகள் மற்றும் வெற்றியின் உண்மையான அர்த்தம் என்ன என்பதை விளக்கும் விவேக்கின் இந்த உருக்கமான கதை தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, பலருடைய பாராட்டுகளையும் விவாதங்களையும் பெற்று வருகிறது.
