நார்வேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இந்திய ஐடி நிபுணர் ஒருவர், அங்குள்ள வேலைச் கலாச்சாரத்தைப் பார்த்து வியந்துபோன தனது அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து இந்தியாவில் பொதுவாக நிலவும் 10 முதல் 12 மணி நேரக் கடுமையான வேலை நேரத்தோடு ஒப்பிடும்போது, நார்வேயில் வாரத்திற்கு 37.5 மணி நேரம், அதாவது தினமும் வெறும் 7.5 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறை அவருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதனால் மாலை 4 மணி ஆகிவிட்டால் அலுவலகத்தில் ஒருவரைக் கூட பார்க்க முடியாது என்றும், அனைவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துக் கிளம்பிவிடுகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தொடக்கத்தில் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல், “இவ்வளவு சீக்கிரம் வேலை முடிந்தால் மீதி நேரத்தில் என்ன செய்வது?” என்று அவர் தவித்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அதன் பிறகுதான் உண்மையான வாழ்க்கையை அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்திய நிறுவனங்களிலும் இதே போன்ற ‘வொர்க்-லைஃப் பேலன்ஸ்’ கொண்டு வரப்பட வேண்டும் என்றும், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்வதை விட தரமான வாழ்க்கையே முக்கியம் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.