உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறியுள்ள ‘பாத்ரூம் மர்டர் கேஸ்’ எனப்படும் கணவன் கொலை வழக்கு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பகுதி ஆண்களின் குடிப்பழக்கத்தையே மாற்றியமைத்துள்ளது.

அதாவது ஆக்ராவை சேர்ந்த ரூபி என்ற பெண், தினசரி குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் யாருக்கும் சந்தேகம் வராதவாறு, தனது வீட்டின் பாத்ரூமிலேயே குழி தோண்டி கணவனின் சடலத்தைப் புதைத்துள்ளார். அதுமட்டுமின்றி, கணவனைக் காணவில்லை என்று போலீஸிலும், உறவினர்களிடமும் சுமார் 45 நாட்களாக நாடகமாடி வந்த ரூபியின் சதிவலை கடந்த ஜூலை 3-ஆம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்தப் பகுதி ஆண்களிடையே கடுமையான மரண பயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த நாஹர் சிங் என்பவர் கூறுகையில், “மதுப்பழக்கத்தால் ஒரு மனைவி தன் கணவனையே கொன்று பாத்ரூமில் புதைத்த சம்பவத்தைக் கேட்டு நான் நடுங்கிவிட்டேன். மதுவினால் என் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் என்ற பயத்தில், இனிமேல் வாழ்நாளில் மதுவைத் தொட மாட்டேன் என முடிவெடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ராஜீவ் திவாகர் என்ற மற்றொரு நபர், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தங்கள் பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள் குடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மாலை நேரங்களில் மதுப்பிரியர்களால் பரபரப்பாகக் காணப்படும் அந்தப் பகுதி, தற்போது ஒட்டுமொத்த ஆண்களும் தங்களின் மனைவிகளுக்குப் பயந்து மதுப்பழக்கத்தைக் கைவிட்டதால் முற்றிலும் அமைதியாகக் காணப்படுகிறது. மேலும் குடிகார கணவனின் கொலையைப் பார்த்து ஒட்டுமொத்த ஊரே திருந்திய இந்த விசித்திரச் சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.