பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பில் அறிவியல் பூர்வமான மருத்துவ ஆலோசனைகளை விடுத்து, மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் பின்பற்றுவது தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்று பிரபல மருத்துவர் ஹனீஷ் பஜாஜ் எச்சரித்துள்ளார். சமீபத்தில் அவரிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 நாட்களேயான ஒரு பச்சிளம் குழந்தையும், அதன் தாயும் மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள மருத்துவர், தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு முன்பாக, தங்களின் குடும்பத்தினரிடம் ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்றும், பிரசவத்திற்குப் பிறகு சடங்குகளை விட மருத்துவரின் அறிவுரைகளுக்கே முன்னுரிமை தரப்படும் என்ற உறுதியை குடும்பத்தாரிடம் வாங்க வேண்டும் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ள மருத்துவர் ஹனீஷ் பஜாஜ், குழந்தை பிறந்தவுடன் பல குடும்பங்களில் தாயின் ஆரோக்கியமும் குழந்தையின் பாதுகாப்பும் மிகக் குறைந்த முன்னுரிமையாக மாறிவிடுவதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dr. Hanish bajaj (@gurgaonhealth)

தனக்கு நேர்ந்த சம்பவத்தை விவரித்த அவர், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த 5 நாள் குழந்தைக்குள் செய்யக்கூடிய அத்தனை ‘பரிசோதனைகளையும்’ சடங்கு என்ற பெயரில் குடும்பத்தினர் செய்துள்ளனர். குழந்தையின் கண்களில் கண் மை வைப்பது, பிறந்த 5 நாட்களாகக் குழந்தைக்கு முறையான ஆடைகளை அணிவிக்காமல் இருப்பது, மற்றும் காட்டன் துணி, கிண்ணம்-கரண்டி மூலம் தாய்ப்பாலுக்குப் பதிலாக மற்றவற்றை புகட்டுவது எனப் பல ஆபத்தான விஷயங்களைச் செய்துள்ளனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

9 மாதங்கள் சுமந்து பெற்றெடுத்த தாயின் கனவுகளும், குழந்தையின் ஆரோக்கியமும் இதுபோன்ற அலட்சியங்களால் பாழாவதாகக் குறிப்பிட்ட அவர், நல்ல பாரம்பரியங்களை ஏற்பதில் தவறில்லை, ஆனால் அவை குழந்தையின் உயிருக்கு ஆபத்தாக அமையக்கூடாது என்றும், அறிவியல் சான்றுகளின் அடிப்படையிலான மருத்துவ வழிகாட்டுதல்களை மட்டும் முதலில் இருந்தே பின்பற்ற வேண்டும் என்றும் பெற்றோர்களுக்குத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார்.