மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் கதகதப்பான சூழலைத் தேடி மனிதர்கள் வாழும் வீடுகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு ஆடைக்குள் மறைந்திருந்த பூச்சியால் 12 வயது சிறுவன் ஒருவன் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அதிர்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

சந்திரப்பூர் மாவட்டம்  கிராமத்தைச் சேர்ந்த அனுப்பூர் ஈஸ்வர் தோனே என்ற சிறுவன், வீட்டில் மாட்டியிருந்த தனது பேண்டை எடுத்துப் போட முயன்றுள்ளான்.

அப்போது எதிர்பாராதவிதமாகப் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்தபோது, அதற்குள் மறைந்திருந்த விஷத் தேள் ஒன்று அவனைக் கொட்டியுள்ளது.

தேள் கொட்டிய சில நிமிடங்களிலேயே சிறுவனின் உடல்நிலை மிக வேகமாக மோசமடைந்தது. எனினும், பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கிராமத்திலேயே நாட்டு மருத்துவம் பார்த்துள்ளனர்.

இதனால் விஷம் உடல் முழுவதும் பரவி, சிறுவனின் ரத்த அழுத்தம்  முற்றிலும் குறைந்து பூஜ்ஜிய நிலைக்குச் சென்றது. நிலைமை கையை மீறியதைத் தொடர்ந்து, அவன் சந்திரப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்.

அங்கு அவசரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, மருத்துவர் ஆனந்த் பெண்டலே தலைமையிலான மருத்துவக் குழுவினர் 3 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்துப் போராடி உயிரைக் காப்பாற்றினர்.

பாம்போ அல்லது தேளோ கடித்தால் முதல் ஒரு மணி நேரம்  மிகவும் முக்கியமானது என்றும், நாட்டு மருத்துவத்தால் சிறுவனின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், மழைக்காலத்தில் ஆடைகளையோ அல்லது காலணிகளையோ அணியும் முன், அவற்றை நன்றாக உதறிப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.