உலகளாவிய தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் மீண்டும் ஒருமுறை கடுமையான பணிநீக்கப் புயல் வீசத் தொடங்கியுள்ளது. செலவினங்களைக் குறைப்பது மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் தங்களது முதலீடுகளைப் பன்மடங்கு அதிகரிப்பது ஆகிய காரணங்களால் முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் எண்ணிக்கையைக் கொடூரமாகக் குறைத்து வருகின்றன.
2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் உலகளவில் சுமார் 219 தொழில்நுட்ப நிறுவனங்களிலிருந்து 1,19,494 ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக ‘Layoffs.fyi’ தளம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் ஒரே நாளில் 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது, இதில் எக்ஸ்பாக்ஸ் (Xbox) பிரிவில் மட்டும் 3,200 பேர் அடங்குவர். ஜெனரேட்டிவ் ஏஐ முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால், 2026-இல் மைக்ரோசாப்ட் பங்குகள் 19 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.
இதேபோல், ஆரக்கிள் நிறுவனம் கடந்த ஓராண்டில் மட்டும் தனது 21,000 ஊழியர்களை (13%) நீக்கியுள்ளது. அமேசான் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் 16,000 கார்ப்பரேட் பணியிடங்களைக் குறைத்துள்ளது.
ஏஐ ஏஜென்ட்களின் வருகையால் இனிவரும் ஆண்டுகளில் தற்போதிருக்கும் பல பணியிடங்களுக்கான தேவை குறையும் என அமேசான் தலைமை நிர்வாகி ஆண்டி ஜாசி தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனம் 8,000 ஊழியர்களை நீக்கியுள்ளதோடு, சுமார் 7,000 ஊழியர்களை ஏஐ சார்ந்த பணிகளுக்கு மாற்றியுள்ளது. டெல், சிஸ்கோ, இன்ட்யூட், சன்பிளேயர், காயின்பேஸ், கிட்லேப், அட்லாசியன், ஸ்னாப் மற்றும் சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து, அந்த நிதியை ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்களுக்கு மடைமாற்றி வருகின்றன.
கூகுள் மற்றும் ஐபிஎம் நிறுவனங்களும் தங்களது மேலாளர்கள் மற்றும் சாதாரண ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகின்றன.
இந்த பணிநீக்க அலை தற்போது ஐடி துறையையும் தாண்டி மற்ற துறைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐடி பிரிவில் 500 முதல் 600 வேலைவாய்ப்புகளைக் குறைத்துள்ளது.
மிக முக்கியமாக, ஜெர்மனியின் புகழ்பெற்ற வோக்ஸ்வாகன் நிறுவனம் ஐரோப்பாவில் நிலவும் அதிக இயக்கச் செலவுகள் மற்றும் சீனாவில் ஏற்பட்டுள்ள மந்தமான விற்பனை காரணமாக, உலகளவில் தனது 1,00,000 ஊழியர்களை (15%) பணிநீக்கம் செய்யவும், ஜெர்மனியிலுள்ள 4 தொழிற்சாலைகளை மூடவும் திட்டமிட்டு வருகிறது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு மட்டும் ஏஐ தொழில்நுட்பத்திற்காக 700 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் செலவிடத் திட்டமிட்டுள்ளதால், சாதாரணப் பணியிடங்களுக்கான ஆபத்து மேலும் அதிகரித்துள்ளது.
