ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷாபூர் ஜாத்ரான், ‘ஹெமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்’ என்ற அரிய வகை மற்றும் கடுமையான நோயால் நீண்ட நாட்களாகப் பாதிக்கப்பட்டுப் போராடி வந்தார். மூளை வரை பரவிய இந்த தீவிர தொற்று பாதிப்புக்காக, கடந்த சில மாதங்களாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் (Delhi-NCR) பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது மருத்துவச் செலவுகளுக்காக ஆப்கானிஸ்தான் வீரர்களும் சக நண்பர்களும் பல்வேறு உதவிகளைச் செய்து, அவர் குணமாக வேண்டிப் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இருப்பினும், சிகிச்சை பலனின்றி தனது 38-வது வயதில் டெல்லியில் அவர் காலமானார். அவரது இந்த திடீர் மறைவு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்திலும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாபூர் ஜாத்ரானின் மறைவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. “ஷாபூர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மிகுந்த மரியாதை, தைரியம் மற்றும் பெருமையுடன் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுக்குச் சேவை செய்தார்.
அவரது பங்களிப்புகளும் சாதனைகளும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கியமான அங்கமாக எப்போதும் நிலைத்திருக்கும்; தேசிய அணிக்காக அவர் உழைத்த உழைப்பை யாராலும் மறக்க முடியாது” என கிரிக்கெட் வாரியம் உருக்கமாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு நெதர்லாந்து அணிக்கு எதிரான சர்வதேசப் போட்டியில் அறிமுகமான ஷாபூர் ஜாத்ரான், ஆப்கானிஸ்தான் அணிக்காக 44 ஒருநாள் போட்டிகள் மற்றும் 36 டி20 போட்டிகள் என மொத்தம் 80 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள இவரது சிறந்த பந்துவீச்சு 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் ஆகும். டி20 கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள இவரது சிறந்த பந்துவீச்சு 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் ஆகும்.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஷாபூர், தனது வேகப்பந்து வீச்சால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன் மற்றும் திலகரத்ன தில்ஷான் போன்ற உலகத் தரம் வாய்ந்த பல பேட்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
