வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் விசித்திரமான மற்றும் துரதிர்ஷ்டவசமான விக்கெட் ஒன்று விழுந்துள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் எடுத்து தங்களது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதற்குப் பதிலடியாகக் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அப்போது ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ஜான் காம்ப்பெல் (72 ரன்கள்), ஷாய் ஹோப் மற்றும் ஜஸ்டின் கிரீவ்ஸ் ஆகியோர் அணியை மீட்டெடுத்தனர். குறிப்பாக, ஷாய் ஹோப் மற்றும் கிரீவ்ஸ் ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 242 ரன்கள் குவித்து இலங்கைக்குக் கடுமையான சவாலை அளித்தது. ஆனால், கிரிக்கெட் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஷாய் ஹோப்பின் அந்த விசித்திரமான விக்கெட்டால் இந்த வலுவான பார்ட்னர்ஷிப் உடைந்தது.

 

இலங்கை வீரர் சோனல் தினுஷா வீசிய பந்து லெக் சைடில் வைடாகச் சென்றது. அதனை அடிக்காமல் ஷாய் ஹோப் அப்படியே லீவ் செய்து விட்டுவிட்டார். அப்படிச் செய்யும்போது அவர் தனது கிரீஸை விட்டுச் சற்றே முன்னோக்கி நகர்ந்திருந்தார். அப்போது பந்தைப் பிடிக்க முயன்ற விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸின் கைகளில் பந்து சரியாகச் சிக்கவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாகப் பந்து அவரது க்ளவுஸில்  பட்டு நேராக ஸ்டம்பின் மீது விழுந்தது. இதில் ஒரு பெய்ல்ஸ் மட்டும் கீழே விழுந்ததால், இலங்கை வீரர்கள் அவுட் கேட்டு நடுவரிடம் அப்பீல் செய்தனர்.

மூன்றாவது நடுவர் சோதித்துப் பார்த்ததில் ஷாய் ஹோப் துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பிங் முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டார். ஹோப் 243 பந்துகளில் 112 ரன்கள் எடுத்திருந்தபோது இந்த விசித்திரமான முறையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கிரீவ்ஸ் 180 ரன்களுக்கு ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 499 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. மேலும் இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.