தமிழக வெற்றி கழக  அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப்பள்ளிக் குழந்தைக்குத் தன்னம்பிக்கையும் உத்வேகமும் அளிப்பதற்குப் பதிலாக, அக்குழந்தையைக் கூனிக் குறுக வைத்து, தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளும் விதத்தில் அமைச்சர் நடந்து கொண்டிருப்பது மிகவும் மலினமான விளம்பர அரசியலாகும்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய அறிவல்ல எனும் அடிப்படை உண்மையைக்கூட உணராத அமைச்சர், தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்துகிறார். கடைசி இருக்கைக் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது; அப்படிப் பார்த்தால் சட்டமன்றத்தில் கடைசி வரிசையில் இருப்பவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்களா? முதல் வரிசையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஒன்றும் அறிவுப்பேரொளி சுடர்விட்டு எரிவது போல் தெரியவில்லை” என்று மிக ஆக்ரோஷமாகச் சாடியுள்ளார். மேலும், வெள்ளை அறிக்கை வெளியிடும்போது தவெக அமைச்சர் மரிய வில்சன் தாய்மொழி தமிழைப் படிக்கவே தடுமாறி நின்றதைச் சுட்டிக்காட்டிய சீமான், அமைச்சர்களே திணறி நிற்கும்போது, ஒரு அரசுப்பள்ளிக் குழந்தையைக் கைகட்டி நிற்கச் செய்து கேள்வி கேட்பது உளவியல் வன்முறை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து தவெக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த சீமான், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அமோனியா கசிவால் இதுவரை 18 பேர் இறந்துபோயுள்ள விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். “தனக்குத் தொடர்பே இல்லாத பள்ளித் துறையில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறும் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, அமோனியா கசிவால் உழைக்கும் மக்கள் இறந்துபோன அந்தத் தொழிற்சாலையைப் பார்வையிட ஏன் செல்லவில்லை? வடசென்னைப் பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகள் சூழியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், அங்கு விதிகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என என்றைக்காவது ஆய்வுக்குச் சென்றிருக்கிறாரா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

விபத்து நடந்த தொழிற்சாலைக்குச் செல்லாமல், பள்ளிகளில் குழந்தைகளிடம் விளம்பர மோகத்திற்காக அத்துமீறுவது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ள அவர், தவெக அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப்பள்ளிகளில் அரசியலைப் புகுத்தும் மோசமானப் போக்கைக் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் இனியாவது கவனம் செலுத்த வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.