விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தவெகஅமைச்சரவையில் இடம்பெற்றதால், விசிக முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகப் பொருள் கொள்ள முடியாது என்றும், தங்களுக்கு இன்னும் திமுகவுடன் நட்புறவு நீடிப்பதாகவும்  கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ரீல்ஸ் போடுவதில் அதிக கவனம் செலுத்துவதாகவும், சமூக ஊடகங்களில் தங்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்யும் இந்த கலாச்சாரம் பொதுவெளியில் ஒரு ஒழுக்கக் கேடாக மாறி வருவதாகவும் அவர் விமர்சித்திருந்தார். அமைச்சர்கள் இதனைப் புரிந்துகொண்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற செயல்களைத் தவிர்ப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் திருமாவளவன் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பேச்சு தற்போது தவெக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையே பெரும் விவாதத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனின் இந்த  பேச்சுக்கு, தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்பியுமான மாணிக்கம் தாகூர் தற்போது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதால், இனி தவெக கூட்டணியில் விசிகவும் ஒரு பகுதிதான்; எனவே திருமாவளவன் வீணாக வார்த்தைகளில் விளையாட வேண்டாம், தேவையில்லாத குழப்பங்களையும் ஏற்படுத்த வேண்டாம்” என்று சாடியுள்ளார். ஆட்சிக்கு ஆதரவு கொடுத்துவிட்டு உள்ளே வந்த பிறகு, வெளியில் இப்படி வேறு மாதிரி பேசுவது முற்றிலும் வெட்டி வேலை என்று குறிப்பிட்ட அவர், தமிழக வெற்றி கழகம் தலைமையில் தற்போது ஒரு நல்ல கூட்டணி அரசு அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த ஆட்சியை ‘சோபா மாடல்’ என்று யார் எப்படி விமர்சித்தாலும், தாங்கள் தங்களது பணிகளைத் திறம்படத் தொடர்ந்து செய்வோம் என்றும் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.