தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி, உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.17,850-லிருந்து ரூ.22,313 ஆக அதிகரிக்கப்படும் நிலையில், இந்த ஊதிய உயர்வால் அரசுக்கு கூடுதலாக ரூ.110.74 கோடி செலவினம் ஏற்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பணியாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டாலும், மதுபானங்களின் விலை எக்காரணம் கொண்டும் உயர்த்தப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில், ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய அமைச்சர், டாஸ்மாக் பார் உரிமங்கள் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும்

ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் ஊதியம் உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய அரசு உரிய கவனம் செலுத்தி வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு எவ்வித சிரமமும் இன்றி டாஸ்மாக் நிர்வாகம் சீரிய முறையில் செயல்பட அனைத்து கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் தனது பேட்டியில் சுட்டிக்காட்டினார்.