மழைக்காலம் வந்துவிட்டாலே இந்தியாவின் பல நகரங்கள் தண்ணீரில் மிதப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் (Bhiwandi) பெய்து வரும் கனமழையால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி, டிராஃபிக் ஸ்தம்பித்தது. பொதுவாக இதுபோன்ற நேரங்களில் மக்கள் அரசைத் திட்டிவிட்டு வீட்டிற்குள் முடங்கிவிடுவார்கள், ஆனால் பிவாண்டியைச் சேர்ந்த ஷதாப் (Shadab) என்ற இளைஞர் வித்தியாசமான முறையில் களமிறங்கி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வெள்ளநீரை அகற்ற வராததால் ஆத்திரமடைந்த ஷதாப், தானே களத்தில் குதிக்க முடிவு செய்தார். மார்வெல் சினிமாக்களில் வரும் ‘ஸ்பைடர்மேன்’ உடம்பைப் போல அச்சு அசலாக ஆடை அணிந்துகொண்டு, முழங்கால் அளவு தேங்கியிருந்த வெள்ள நீரில் இறங்கினார்.

டிராஃபிக் ஜாமில் சிக்கித் தவித்த வாகனங்களைச் சீரமைத்ததுடன், அடைப்புகளை நீக்கித் தேங்கியிருந்த மழைநீரையும் அப்புறப்படுத்தினார். சினிமாவில் ஸ்பைடர்மேன் மக்களைக் காப்பாற்றுவதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, நிஜ வாழ்க்கையிலும் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே இந்த உடையை அணிந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ‘ரியல் லைஃப் ஸ்பைடர்மேன்’ காரியத்தை  செய்தி நிறுவனம் வீடியோவாக வெளியிட, அது தற்போது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

மறுபுறம், மகாராஷ்டிராவில் பெய்து வரும் அதீத கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் அவசர ஆலோசனை நடத்திய அவர், மாவட்ட நிர்வாகங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளார். மும்பை மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள் வழக்கம்போல இயங்கி வருவதாகவும், சில இடங்களில் மட்டும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.