மும்பை பைதுனி பகுதியில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்  உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் மர்ம மரணச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நாசிக் மாவட்டம் சதனா தாலுகாவில் உள்ள  கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதிய விவசாயத் தம்பதியினர், கடந்த ஜூன் 28-ஆம் தேதி இரவு தங்களது வீட்டில் சிக்கன் உணவைச் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே அவர்கள் தயிரையும் குடித்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பிறகு, தம்பதியினருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி, மயக்கம் போன்ற தீவிர உபாதைகள் ஏற்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை உறவினர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி 68 வயதான துவாரகாபாய் சாந்தாராம்  என்ற முதிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் சாந்தாராம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி மாலேகான் மருத்துவமனையில் 10 நாட்களுக்குப் பிறகு தற்போது உயிரிழந்துள்ளார். தம்பதியினரின் இந்த அடுத்தடுத்த மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை  அதிகாரிகள் கிராமத்திற்கு நேரில் சென்று, அவர்கள் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் சாம்பிள்களைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, சிக்கன் மற்றும் தயிர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சாப்பிடுவதாலோ அல்லது கெட்டுப்போன பழைய உணவை உண்பதாலோ கடுமையான ‘ஃபுட் பாய்சனிங ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த தம்பதியின் மரணத்திற்கு சிக்கன் காரணமா, தயிர் காரணமா அல்லது சமையலில் ஏதேனும் நச்சு கலந்ததா என்பதற்கான ஆய்வக அறிக்கை இன்னும் வராததால், இந்த மரணத்தின் பின்னணி மாவட்ட மருத்துவ நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.