சிறு பிள்ளைகளின் சுட்டித்தனமும் குறும்புத்தனமும் சில நேரங்களில் எல்லை மீறிப் போய், பெற்றோர்களின் தலைவலியில் கொண்டு வந்து முடிப்பதுண்டு. அந்த வகையில், சீனாவில் உள்ள குன்மிங்  பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது ₹4.3 கோடி (சுமார் 3.6 மில்லியன் யுவான்) மதிப்புள்ள அதிநவீன ‘பெராரி’ சொகுசு ஸ்போர்ட்ஸ் காரை வழக்கம்போல் சாலையோரமாக நிறுத்திவிட்டுத் தனது வேலை நிமித்தமாக வெளியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள், அந்த விலையுயர்ந்த காரை விளையாட்டுப் பொருளாக மாற்றிய வினோதச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கையிலிருந்த குச்சியால் காரை சரமாரியாகத் தட்டி விளையாடிய அந்தச் சிறுவர்கள், ஒருகட்டத்தில் பெராரி காரின் போனட் மீது ஏறி, பூங்காவில் விளையாடுவதைப் போல சறுக்கு விளையாட்டு  விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இதனால் காரின் பம்பர் உடைந்ததுடன், கார் முழுவதும் ஏகப்பட்ட கீறல்கள்  விழுந்து பெரும் சேதமடைந்தது. வேலை முடிந்து திரும்பி வந்த தொழிலதிபர், தனது காரின் அவல நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் சிறுவர்களின் இந்த விபரீத விளையாட்டு அம்பலமானது. இந்தச் சேதத்தைச் சரி செய்ய இந்திய மதிப்பில் சுமார் ₹4.6 லட்சம் ($500K மதிப்புள்ள காரில் நஷ்டம்) செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட காரின் உரிமையாளர் சிறுவர்களின் பெற்றோரை அணுகி நஷ்டஈடு கேட்டபோது, அவர்கள் முதலில் வெறும் சில நூறு யுவான்களை மட்டுமே தருவதாகக் கூறி அலட்சியப்படுத்தியுள்ளனர்.

பின்னர் காரின் மதிப்பை உணர்ந்து, அதிகபட்சமாக 5,000 யுவான் (சுமார் ₹60,000) மட்டுமே தர முடியும் என்றும், அதற்கு மேல் முழுப் பணத்தையும் தர முடியாது என்றும் கறாராக மறுத்துவிட்டனர்.

எக்ஸ் தளத்தில் ‘@VoiceOfChina_’ என்ற பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த சிசிடிவி வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “காரின் உரிமையாளர் அந்தப் பெற்றோர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது சிறுவர்கள் என்பதால் மன்னித்துவிட வேண்டுமா?” என நெட்டிசன்கள் பலரும் விவாதங்களை எழுப்பி வருகின்றனர்.