ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், தாய் நாய் இறந்ததால் பசியோடு தவித்துத் திரிந்து கொண்டிருந்த ஐந்து குட்டிகளுக்கு, அந்தப் பகுதியில் இருந்த பன்றி ஒன்று பாலூட்டி அரவணைத்து வரும் நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. விலங்குகளுக்கு இடையே இருக்கும் இயல்பான பகைமையைத் தாண்டி, தாய்மை மற்றும் பாசத்திற்கு எந்தவித எல்லையும் இல்லை என்பதை இச்சம்பவம் நிரூபித்துள்ளது. தங்களைப் பெற்ற தாய் இல்லாததால் பசியால் வாடி அநாதையாகத் தவித்த ஐந்து சிறிய நாய் குட்டிகளும் தன்னிடம் வந்தபோது, விலங்கின வேறுபாடுகளை மறந்து அந்தப் பன்றி அவற்றுக்குத் தாயாக மாறிப் பால் கொடுத்து பசியாற்றிய விசித்திரக் காட்சி உள்ளூர் மக்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நெகிழ்ச்சியான காட்சியை அங்கிருந்த பொது மக்கள் தங்களது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்து, மிக வேகமாக வைரலாகி வருகிறது. மனிதர்கள் மத்தியில் சுயநலமும் பிரிவினைகளும் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், தாயை இழந்த குட்டிகளுக்குப் பன்றி காட்டும் இந்த தூய்மையான அன்பும் தாய்மையும் மனித சமூகத்திற்கே ஒரு சிறந்த பாடம் என்று நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
