2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போது இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அவர் கேப்டன் பதவியை இழந்தது மட்டுமின்றி, அணியிலும் இடம் பெறாத சூழலில், இந்திய அணி டி20 போட்டிகளில் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடி வருகிறது.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, சூர்யகுமார் யாதவ் இந்திய அணியைக் கிண்டல் செய்வது போல ஒரு போலி அறிக்கை சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கக் கதையை பகிர்ந்துள்ளார். அதில், “என் பெயரில் சமூக வலைதளங்களில் உலா வரும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை; நான் அப்படி எந்தவொரு தேவையற்ற கருத்தையும் கூறவில்லை.
எனவே, இது போன்ற போலியான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், மற்றவர்களுக்கும் பகிர வேண்டாம். இந்திய கிரிக்கெட் மற்றும் எனது சக வீரர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் இருக்கும். இந்த வீண் வதந்திகளை விட எனது செயல்பாடுகளே எனது உண்மையான குணத்தைப் பேசும்” என்று ஆக்ரோஷமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய இந்திய அணி முழு பலத்துடன் சிறப்பாக விளையாட வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள சூர்யா, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரு சிறப்பு செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
“வைபவ், நீ ஒரு அற்புதமான மற்றும் மறக்க முடியாத கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கியிருக்கிறாய். ஒவ்வொரு நொடியையும் ரசித்து விளையாடி, நம் நாட்டுக்குப் பெருமை தேடித்தர வாழ்த்துகள்” எனக் பாராட்டியுள்ளார்.
