அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே பல மாதங்களாக நீடித்த போரில் இரு நாடுகளும் மாறி மாறித் தாக்குதல் நடத்தியதால் கடுமையான பேரழிவு ஏற்பட்டது. இந்த கொடூரமான போரில் ஈரானின் அப்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தைக் கொண்டுவர பாகிஸ்தான் மத்தியஸ்தராக பஞ்சாயத்து செய்ய முயன்றது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்பி ரிக் ஸ்காட் பாகிஸ்தானை மிகக் காட்டமாகச் சாடியுள்ளார். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக உலகப் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் மறைந்திருந்த நாடு எது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாகிஸ்தானின் உண்மையான முகம் என்ன என்பதை உலகம் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள கடுமையான  சட்டங்களைப் பயன்படுத்தி அங்குள்ள கிறிஸ்தவ மக்கள் ஒடுக்கப்படுவதாகவும், ஈரானை ஆட்சி செய்த ஒரு கொடூரமான சர்வாதிகாரியைப் பாகிஸ்தான் பிரதமர் புகழ்ந்து தள்ளியுள்ளார் என்றும் ரிக் ஸ்காட் குற்றம் சாட்டியுள்ளார். ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்குப் புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான், இரு நாடுகளுக்கு இடையே சமாதானம் பேசும் தகுதியற்ற ஒரு நாடு என்று அவர் வறுத்தெடுத்துள்ளார். முன்னதாக வைரலான வீடியோவில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “ஈரான் உச்ச தலைவர் கமேனி ஒரு சிறந்த அறிஞர் மற்றும் தலைவர்; ஈரானும் பாகிஸ்தானும் சகோதர நாடுகள், நமது இதயங்கள் ஒன்றாகவே துடிக்கின்றன” என்று உருகியிருந்தார்.

மேலும் போரின் மத்தியஸ்தத்தில் பாகிஸ்தானின் தலையீடு குறித்து அமெரிக்க எம்பிக்கள் கவலை தெரிவிப்பது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் டொனால்ட் ட்ரம்பிற்கு நெருக்கமான செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட பல அமெரிக்கப் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைகளின் போது பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.