சீனாவின் நான்ஜிங் நகரின் முன்னாள் அரசு அதிகாரியான 69 வயது யாங் யூலின் என்பவருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1993 முதல் 2023 வரையிலான முப்பது ஆண்டுகால பொதுப்பணியில், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள், நிலப் பரிமாற்றங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இதற்குப் பிரதிபலனாக, இந்திய மதிப்பில் சுமார் 2,800 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கியதுடன், பணமோசடி, பொதுப்பணத்தை கையாடல் செய்தல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் இவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ஊழலுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், யாங் யூலின் செய்த குற்றங்கள் நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி கடுமையான தண்டனையை உறுதி செய்தது. விசாரணையின் போது யாங் தன் மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டு, வருத்தம் தெரிவித்து குறைந்த தண்டனை வழங்குமாறு கோரிய போதிலும், ஊழலின் அளவு மிகப்பிரம்மாண்டமாக இருந்ததால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது. சீனாவில் நிதி சார்ந்த குற்றங்களுக்கு அரிதாகவே மரண தண்டனை விதிக்கப்படும் என்றாலும், இதற்கு முன்பும் 2021-ல் லாய் சியாவோமின் மற்றும் 2024-ல் லி ஜியான்பிங் போன்ற அதிகாரிகள் இதேபோன்ற பெரும் ஊழல் வழக்குகளில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
