பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் அலட்சியப் போக்கின் காரணமாக, பிரசவத்தில் ஏற்பட்ட கடுமையான தாமதத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனன்யா என்ற பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த துயர சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். பிரசவ வலியால் துடித்த தனது அண்ணியை உடனடியாக ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு தங்களுக்கு தெரிந்த ஒரு மருத்துவர் இருந்ததாலும், ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வந்ததாலும் ஆரம்பத்தில் எல்லாம் சரியாக நடக்கும் என்றே அவர்கள் நம்பியுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்குச் சென்ற பிறகுதான் உண்மையான சித்திரவதை ஆரம்பமாகியுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை, ரத்தப் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை போன்ற வழக்கமான நடைமுறைகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல கவுண்டர்களுக்கும், கட்டிடங்களுக்கும் அலைக்கழித்துள்ளனர்.
My sister-in-law went into labor, so we rushed her to a government hospital. We knew one of the doctors there, the ambulance arrived on time, and at first everything seemed well organized.
But the real struggle started after we reached the hospital.
We were sent from one…
— Ananya (@blessings_soul) July 6, 2026
இந்த தேவையற்ற தாமதமும் இழுபறியும் நீடித்ததால், பொறுமையிழந்த குடும்பத்தினர் வேறு வழியின்றி அந்தப் பெண்ணை உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்குள்ள மருத்துவர்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும், அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட காலதாமதத்தின் விளைவாக, பிறந்த குழந்தை தற்போது ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அனன்யா, “வசதி உள்ளவர்கள் தயவுசெய்து நல்ல தனியார் மருத்துவமனைக்குச் செல்லுங்கள்; ஒரு லட்சம் ரூபாய் செலவானாலும் பரவாயில்லை, இனிமேல் என் வாழ்நாளில் அரசு மருத்துவமனைப் பக்கமே போக மாட்டேன்” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து, “இந்தியாவில் அவசர சிகிச்சை என்றாலே அரசு மருத்துவமனைகளைத் தவிர்ப்பது நல்லது” என்றும், “கர்ப்பிணிகளின் உயிரோடு விளையாடும் இந்த மருத்துவக் கட்டமைப்பு மாற வேண்டும்” என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
