பாலிவுட் திரையுலகில் ‘பாக்கிஸா’ மற்றும் ‘ரசியா சுல்தான்’ போன்ற புகழ்பெற்ற திரைப்படங்கள் உட்பட சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்த பிரபல பழம்பெரும் நடிகை கீதா கபூரின் இறுதிநாட்கள், நெஞ்சை உலுக்கும் சோகமாக முடிந்துள்ளன. தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கிய இவருக்கு, முதுமை காலத்தில் அவரது மகனே மிகப்பெரிய துரோகத்தை இழைத்துள்ளார். அதாவது தங்களது சொகுசு பங்களாவை மகனின் சிகிச்சைக்காக விற்றுவிட்டு, கோரேகான் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்துள்ளனர். ஆனால், சொகுசு வாழ்க்கைக்கு பழகிய கொரியோகிராஃபராக இருந்த அவரது மகன் ராஜா  மற்றும் ஏர் ஹோஸ்டஸாக இருந்த மகள் ஆகியோர் தாயை சரியாகக் கவனிக்கவில்லை.

குறிப்பாக மகன் ராஜா, தாயை நான்கு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிட அனுமதிப்பதும், அறையில் பூட்டி வைத்து அடித்துத் துன்புறுத்துவதுமாக இருந்துள்ளார். முதியோர் இல்லத்திற்குச் செல்ல மறுத்ததால், தாயை பட்டினி போட்டு நோய்வாய்ப்பட வைத்துள்ளார். பின்னர், கடந்த 2017 ஏப்ரல் 21 அன்று, ரத்த அழுத்த சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, ஏடிஎம்மில் பணம் எடுத்து வருவதாகக் கூறிவிட்டு, வீட்டை விற்றுவிட்டு தப்பியோடியுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீதா கபூர், தன் மகன் தன்னை அழைத்துச் செல்ல வருவான் என்ற ஏக்கத்தில், அழுதுகொண்டே நாட்களைக் கடத்தியுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அவரது மருத்துவமனை பில்களைத் தயாரிப்பாளர்கள் அசோக் பண்டிட் மற்றும் ரமேஷ் தௌரானி ஆகியோர் செலுத்தி, அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கு கடந்த 2018-ல் கீதா கபூர் காலமானார். அவர் இறப்பதற்கு முந்தைய கடைசி 4 மாதங்கள், கடுமையான மன உளைச்சலால் உணவேதும் உட்கொள்ளாமல் வெறும் திரவ உணவுகளை மட்டுமே குடித்து, மகனின் வரவுக்காகக் காத்திருந்து உயிரை விட்டுள்ளார்.

அவர் இறந்த பிறகும், அவரது முகம் பார்க்க வராத மகனால், இறுதிவரை தாயின் ஏக்கம் தீரவில்லை. இறுதியில் கூப்பர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அவரது மகள் வந்து இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்தார் என்று தயாரிப்பாளர் அசோக் பண்டிட் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பெற்ற மகனின் இந்த கொடூர செயல் ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்துள்ளது.